மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது


மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 8:03 PM GMT (Updated: 2 March 2021 8:03 PM GMT)

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உத்தர கன்னடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஜ்பே சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து விமான மூலம் தங்கம், வெளிநாட்டு பணம், விலையுயர்ந்த பொருட்கள் கடத்தி கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.

இதனால் விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ்ந்தநிலையில் நேற்று காலை துபாயில் இருந்த மங்களூருவுக்கு ஒரு விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில், சுங்கவரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பயணியையும், அவரது உடைமையும் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது இழுத்து செல்லும் பெட்டியின் உள்ளே மறைத்து வைத்து தங்க கம்பிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி சுங்கவரித்துறையினர், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில், அவர் உத்தர கன்னடா மாவட்டம் முருடேஸ்வர் பகுதியை சேர்ந்த முகமது அவான் என்பது தெரியவந்தது. ேமலும் அவரிடம் இருந்து ரூ.16.52 லட்சம் மதிப்பிலான 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை, சுங்கத்துறையினர் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அவானை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story