சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்


சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்
x
தினத்தந்தி 3 March 2021 2:33 AM IST (Updated: 3 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் தலைவர் பிருந்தா கரத் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் ஒரு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரின் முன்ஜாமீன் மனு, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து, ‘‘அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நீங்கள் தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்’’ என்று கூறியது.

இந்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி போப்டேவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் தலைவர் பிருந்தா கரத் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், ஜெயிலுக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், பலாத்காரத்தை ஊக்குவிக்கும்வகையில் அமைந்து விடும். ஆகவே, உங்கள் கருத்துகளை வாபஸ்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story