மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் சுகாதாரப்பணியாளர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பிறநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
அப்போது பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்கள் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டனர். மேலும் அவர்கள் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என பொது மக்களை கேட்டு கொண்டனர்.
மும்பையை பொறுத்தவரை நேற்று முன்தினம் 3 தனியார் ஆஸ்பத்திரிகள், 5 மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் என 8 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 1,981 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்தநிலையில் நேற்று தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் 22 மாநகராட்சியால் அமைக்கப்பட்டவை ஆகும்.
இதற்கிடையே பி.கே.சி. பகுதியில் மாநகராட்சி சார்பில் பிரமாண்ட மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் திடீரென மக்கள் கூட்டம் அதிகாித்தது. மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு மையத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவின.
கொரோனா தடுப்பூசி போடும் மையத்திலேயே அதிக கூட்டம் கூடியதாக பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த குடிமக்களை அவர்களது உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். இதனால் இளம் வயதினரும் அதிகளவில் அங்கு நின்றதையும் பார்க்க முடிந்தது. இதேபோல பால்கர், புனே, நாசிக் உள்பட மாநிலம் முழுவதும் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர்.
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story