புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 March 2021 8:56 AM IST (Updated: 3 March 2021 8:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், புதுச்சேரி மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் செயல்பட தொடங்கின. 

இந்த நாட்களில் மாணவர்களின் சந்தேகம் மட்டும் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ள ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழுநேரமும் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி வாரத்தில் 6 நாட்களும் (திங்கள் முதல் சனிக்கிழமை) முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பள்ளிகளில் முழுநேர வகுப்புகள் தொடங்கினால் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story