உத்தரபிரதேசத்தில் தொடரும் குற்ற சம்பவங்கள் - பிரியங்கா காந்தி சாடல்
உத்தரபிரதேசத்தில் தினமும் ஒரு குடும்பம் நீதி கேட்டு குரல் கொடுக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஹத்ராஸ் மாவட்டத்தில் 50 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது மகளை 2018-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள நபர்தான் இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போன்று புலந்த்ஷகிர் என்ற இடத்தில் ஒரு வீட்டின் குழியில் இருந்து, காணாமல் போன 12 வயது சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் குற்றச்சம்பவங்களை சாடி, டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
தன் மகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப்பெற மறுத்து விட்ட தந்தை, ஹத்ராசில் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு புலந்த்ஷகிர் என்ற இடத்தில் பல நாட்களாக காணாமல் போன 12 வயது சிறுமியின் உடல், ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
குற்றச்சம்பவங்கள் தொடர்பான உத்தரபிரதேச அரசின் தவறான பிரச்சாரத்துக்கு மாறாக, ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் அல்லது மற்றொரு குடும்பம் நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story