பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
கர்நாடக பட்ஜெட்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் "ஒரே தேசம் ஒரே தேர்தல்" குறித்து விவாதம் நடக்கிறது. இதில் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது.
அதன்பிறகு வருகிற 8-ந் தேதி 2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை(வரவு-செலவு கணக்கு) நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், அவற்றை சமாளிக்க புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அரசுக்கு நெருக்கடி
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ரமேஷ் ஜார்கிகோளி விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சினையை எழுப்பி ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி கொடுக்க அக்கட்சி ஆலோசித்துள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் இறுதி வரை நடக்கவுள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அது மட்டுமின்றி கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, சட்டசபை கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், கைகளுக்கு சானிடைசர் திரவத்தை வழங்குதல், முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விதான சவுதாவை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story