இளம்பெண் மரண சர்ச்சை: மராட்டிய மந்திரி ராஜினாமா; கவர்னர் ஏற்பு


இளம்பெண் மரண சர்ச்சை:  மராட்டிய மந்திரி ராஜினாமா; கவர்னர் ஏற்பு
x
தினத்தந்தி 5 March 2021 12:49 AM GMT (Updated: 5 March 2021 12:49 AM GMT)

இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய வன துறை மந்திரியின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டுள்ளார்.

புனே,

மராட்டியத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.  முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் சஞ்சய் ரதோட்.

மராட்டியத்தில் டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் (வயது23).  இவர், புனே ஹடாப்சர் பகுதியில் கடந்த பிப்ரவரி 8ந்தேதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இந்தநிலையில் மந்திரி சஞ்சய் ரதோட், தனக்கும் இளம்பெண்ணின் மரணத்துக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்.

பா.ஜ.க. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நெருக்கடி அளித்து வந்த நிலையில், மராட்டிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள சூழலில் கடந்த பிப்ரவரி 28ந்தேதி ரதோட் ராஜினாமா செய்யும் முடிவை வெளியிட்டார்.

அவரது ராஜினாமாவை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உடனடியாக ஏற்று கொண்டார்.  இந்நிலையில், ரதோட்டின் ராஜினாமாவை மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று (வியாழ கிழமை) ஏற்று கொண்டுள்ளார்.

Next Story