மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. நாராயண் ரானே வலியுறுத்தல்


மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. நாராயண் ரானே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2021 12:37 AM IST (Updated: 7 March 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக எம்.பி. நாராயண் ரானே கூறியுள்ளார்.

மும்பை,

புனே இளம்பெண் மரணத்தில் பதவியை ராஜினாமா செய்த மந்திரி சஞ்சய் ரதோட்டுக்கு தொடர்பு, காலியாக உள்ள சபாநாயகர் பதவி, முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற கார் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கு எதிராக பா.ஜனதா அழுத்தம் கொடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய சுதீர் முங்கண்டிவார், காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்கவில்லையென்றால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் என்றார். இந்த நிலையில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் முதல்-மந்திரியுமான நாராயண் ரானே வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. பொருளாதாரம் குலைந்து விட்டது. மாநில அரசுக்கு நிலையை கையாளும் திறன் இல்லை. மாநிலத்தில் தான் அதிக கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

Next Story