கேரளாவில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது; மத்திய இணை மந்திரி குற்றச்சாட்டு
கேரளாவில் ஊழல், தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய ஆட்சி நடந்து வருகிறது என மத்திய இணை மந்திரி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சி.பி.ஐ. (எம்) தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய ஆட்சி நடந்து வருகிறது என மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
கேரள அரசு, தேவையில்லாமல் மத்திய அரசு மற்றும் சுங்க துறையால் துன்புறுத்தப்படுகிறோம் என கூறி இரக்கம் பெற முயற்சிக்கிறது. சுங்க துறை ஐகோர்ட்டில் அளித்துள்ள அறிக்கை தன்னிச்சையானது அல்ல. ஸ்வப்னா சுரேஷ் பாதுகாப்பு கோரியது பற்றி சிறை டி.ஜி.பி. தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு எதிர் மனுவாக சுங்க துறையின் அறிக்கை தாக்கலாகி உள்ளது.
தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள ஸ்வப்னா சுரேஷ், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்காக வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டது என குறிப்பிட்டு உள்ளார் என்ற தகவலை கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்க துறை தெரிவித்து உள்ளது.
இதேபோன்று ஆளும் சி.பி.எம்.மின் முன்னாள் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி பாலகிருஷ்ணன் ஐபோன்களை லஞ்சமாக பெற்றுள்ள சமீபத்திய விவகாரத்தில் அவரிடம் சுங்க துறை விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
சி.பி.ஐ. (எம்) தங்கம், டாலர் கடத்தல் மற்றும் ஊழலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என இவை காட்டுகின்றன. மத்திய அரசு துன்புறுத்துகிறது என்றும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றும் கூறி கொண்டு அவர்கள் சென்று விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story