நாடாளுமன்றத்தில் ‘பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம்’ திருச்சி சிவா பேட்டி


நாடாளுமன்றத்தில் ‘பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம்’ திருச்சி சிவா பேட்டி
x
தினத்தந்தி 9 March 2021 5:01 AM IST (Updated: 9 March 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு காரணம் மத்திய அரசுதான். பக்கத்து நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.51.14-க்கும், பூடானில் ரூ.49.56-க்கும், இலங்கையில் ரூ.60.26-க்கும், வங்காளதேசத்தில் ரூ.76.41-க்கும், நேபாளத்தில் ரூ.68.18-க்கும் விற்கப்படுகிறது. மன்மோகன்சிங் பதவி இறங்கும்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 108 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 50 காசுகள் தான். டீசல் ரூ.57.28-க்கு விற்றது.

இன்றைக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 54.41 டாலராக உள்ளது. அன்றைக்கு இருந்த விலையில் கிட்டத்தட்ட சரிபாதி. ஆனால் அன்றைக்கு விற்றவிலையை விட 30 சதவீதம் அதிகமாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் காரணம். பா.ஜனதா ஆட்சியில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சமையல் கியாஸ் விலை ரூ.225 வரை கூடி இருக்கிறது. எனவேதான் ஏழைகளை வதைக்கும் இந்த நிலையை கண்டித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினோம். இதனால் அவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story