இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்; உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
75-வது ஆண்டு விழா
இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இதன் 75-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு (2022) வருகிறது.
நாட்டின் சுதந்திர தின 75-வது ஆண்டை சிறப்பாக கொண்டாட மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களை 75 வாரங்களுக்கு முன்னரே தொடங்க திட்டமிட்டு உள்ளது.
அந்தவகையில் வருகிற 12-ந்தேதி இந்த கொண்டாட்டங்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. இது காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்யாகிரகத்தின் 91-வது நினைவு நாள் ஆகும்.
உயர்மட்டக்குழு அமைப்புஇந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு சமீபத்தில் அமைத்துள்ளது. இதில் 259 பேர் உறுப்பினராக உள்ளனர்.
இதில் முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 28 மாநில முதல்-மந்திரிகள், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரகுமான், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அனைத்து மத்திய மந்திரிகள், பல்வேறு கவர்னர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த குழுவில் உள்ளனர்.
விடுதலைப்போராட்ட ஹீரோக்கள்இந்த உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் நேற்று மெய்நிகர் முறையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய பிரதமர் மோடி, 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக, பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘1947 முதல் இதுவரை நாம் அடைந்துள்ள சாதனைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன. நமது விடுதலைப்போராட்ட ஹீரோக்களின் தியாகங்களை பற்றி மக்களுக்கு கூறவேண்டியது அவசியம் ஆகும்’ என்று தெரிவித்தார்.