பாஜக என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் கேட்கிறது - மம்தா குற்றச்சாட்டு


பாஜக என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் கேட்கிறது - மம்தா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 March 2021 11:57 AM GMT (Updated: 2021-03-31T17:27:44+05:30)

பாஜக என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் கேட்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்தின்போது கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்களும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாங்கள் கொடுக்கும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி இன்று கூறியதாவது, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தினமும் புகார் அளித்து வருகிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. தேர்தல் ஆணையம் பாஜக என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் கேட்கிறது. இது போன்ற தேர்தல் ஆணையத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை’ என்றார்.

Next Story