மராட்டிய கவர்னர் - இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சந்திப்பு


மராட்டிய கவர்னர் - இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சந்திப்பு
x
தினத்தந்தி 31 March 2021 6:16 PM IST (Updated: 31 March 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று சந்தித்தார்.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கிடையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகளும் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகள் அனைத்தும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதனால், ஒருநாள் போட்டிகளில் மைதானத்திற்குள் ரசிகர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாமல் பூட்டிய மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில், மராட்டிய மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கவர்னர் அலுவலகத்தில் இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது, கொரோனா விதிகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் புனே மைதானத்தில் இந்திய-இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் நடைபெற உதவியதற்கு கவர்னர் கோஷ்யாரிக்கும், ரவிசாஸ்திரி நன்றி தெரிவித்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு கவர்னர் கோஷ்யாரி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று என்று கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story