இந்திய சர்க்கரை மற்றும் பருத்தி மீதான தடையை பாகிஸ்தான் ஏன் நீக்கியது...?


Image courtesy : Reuters
x
Image courtesy : Reuters
தினத்தந்தி 1 April 2021 10:27 AM IST (Updated: 1 April 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது.

புதுடெல்லி

பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு கவுன்சில் (ஈ.சி.சி) புதன்கிழமை இந்திய சர்க்கரை, பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்வதற்கான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால தடையை நீக்கி உள்ளது.தனியார் நிறுவனங்களுக்கு 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து உள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து  மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய 200 சதவீதம் வரி விதித்ததால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தடை விதித்து இருந்தது. 

பிப்ரவரியில் ஒரு புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் இடையே கடிதப் பரிமாற்றம் போன்ற இரு காரணங்களால் இரு நாடுகளிடையே  உறவுகளில் ஒரு இணக்கம் வந்து உள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் ஹம்மத் அசார், உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரை இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இருந்து, வரும் ஜூன் மாத இறுதிக்குள் பருத்தி இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டத் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஹம்மத் அசார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பருத்தியின் தேவை அதிகமாக இருப்பதாலும், வெள்ளைச் சர்க்கரையின் விலை பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு என்பதாலும் 2 ஆண்டுகளாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சில்லறை வர்த்த்கத்தில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. அங்கு  ஒரு கிலோ சர்க்கரை பாகிஸ்தான் ரூபாய் 100 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மையாக விவசாயிகளுக்கு கரும்பு விலை அதிகமாக இருப்பதால், பாகிஸ்தானில் இந்திய மற்றும் உள்நாட்டு விலைகளுக்கு இடையிலான மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

அதுபோல் மொத்த பருத்தி உற்பத்தி வெறும் 5.6 மில்லியன் பேல்களாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு 6 மில்லியனுக்கும் அதிகமான பேல்கள் பருத்தியின் பற்றாக்குறையை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.இது 12 மில்லியன் பேல்களின் தேவைக்கு மாறாக உள்ளது. பாகிஸ்தானின் பருத்தி சப்ளையர்களான அமெரிக்கா, பிரேசில் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் இறக்குமதியுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி ஒரு பவுண்டுக்கு 4-5 சதவீதம்  வரை மலிவாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராகவும், இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும் இந்தியா உள்ளது.  24 மில்லியன் பேல்களுக்கான தேவைக்கு மாறாக, இந்தியாவின் பருத்தி உற்பத்தி 37.1 மில்லியன் பேல்களாக உள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை 31 மில்லியன் டன்களின் உற்பத்தி அதன் ஆண்டு தேவை 26 மில்லியன் டன்களை விட அதிகமாக உள்ளது.

Next Story