தமிழக தேர்தலுக்கும், ரஜினிக்கு தாதாசாகேப் விருது அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை - மத்திய அமைச்சர் ஜவடேகர்
தமிழக சட்டசபை தேர்தலுக்கும், ரஜினிகாந்திற்க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய திரைப்படத்துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்நிலையில், 51-வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், இந்திய சினிமா துறையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் தேர்தலை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜவடேகர், தமிழக சட்டசபை தேர்தலுக்கும், ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
Related Tags :
Next Story