கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவை தடுப்பது குறித்து நிபுணர் குழு ஆய்வறிக்கை தாக்கல்


கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவை தடுப்பது குறித்து நிபுணர் குழு ஆய்வறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 1 April 2021 7:32 PM GMT (Updated: 1 April 2021 7:32 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவுகளை தடுப்பது குறித்த ஆய்வறிக்கையை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம், நிபுணர் குழு வழங்கியது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த நிலச்சரிவுகளை தடுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க கர்நாடக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழுவின் தலைவராக அனந்த் ஹெக்டே ஆசிசரா நியமிக்கப்பட்டார். அந்த நிபுணர் குழு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு நேரில் சென்று இடங்களை ஆய்வு செய்து விவரங்களை சேகரித்தது.

இந்த நிலையில் அந்த நிபுணர் குழு, முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து அதுகுறித்த அறிக்கையை அவரிடம் தாக்கல் செய்தது. இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவு சம்பவங்களை தடுப்பது தொடர்பாக நிபுணர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அந்த குழு இன்று (அதாவது நேற்று) என்னிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. மேற்கு தொடர்ச்சி மலை, கடலோர பகுதியில் அதிகமாக நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை வழங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது தொடர்பாக சில ஆலோசனைகளை குழு கூறியுள்ளது.

நிலச்சரிவை தடுப்பது, நிவாரணம் வழங்குவது, மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்து குழு முக்கியமான பரிந்துரைகளை செய்துள்ளது. கர்நாடகத்தில் 23 தாலுகாக்கள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாக உள்ளதாக அந்த குழு கூறியுள்ளது. நிலச்சாிவுகளை தடுக்க மாவட்ட பேரிடர் நிர்வாக குழுக்களை பலப்படுத்த வேண்டும், ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று குழு ஆலோசனை கூறியுள்ளது. மாநில அரசு இந்த குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story