மராட்டியத்தில் மருத்துவமனைகள் அலைக்கழிப்பு; 38 வயது கொரோனா நோயாளி உயிரிழப்பு


மராட்டியத்தில் மருத்துவமனைகள் அலைக்கழிப்பு; 38 வயது கொரோனா நோயாளி உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 April 2021 5:03 AM IST (Updated: 2 April 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 38 வயது நோயாளி மருத்துவமனைகளின் அலைக்கழிப்பினால் உயிரிழந்து உள்ளார்.

நாசிக்,

மராட்டியத்தில் கொரோனா தொற்றின் புதிய அலையால் சுகாதார உட்கட்டமைப்பு பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.  நாளொன்றுக்கு 40 ஆயிரம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  மராட்டியத்தின் நாசிக் நகரில் மாநகராட்சி கட்டிடத்திற்கு வெளியே பாபாசாஹேப் கோலே என்ற 38 வயதுடைய நபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  பிராணவாயு செலுத்தும் முக கவசம் அணிந்தபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கொரோனா நோயாளியாவார்.

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்த அந்த நபர் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மாநகராட்சியின் ஆம்புலன்சில் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் நள்ளிரவில், அவரது பிராணவாயு அளவு 40 சதவீதம் அளவுக்கு குறைந்து போனது.  95 சதவீதம் அல்லது அதற்கு கூடுதலாக பிராணவாயு அளவு இருக்க வேண்டும்.  இந்த பற்றாக்குறையால் அவர் நள்ளிரவு ஒரு மணியளவில் உயிரிழந்து உள்ளார்.

3 நாட்களுக்கு முன் பைட்கோ என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அதன்பின் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கே படுக்கை இல்லை.

இதுபோன்று பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.  இதனால், நகராட்சி மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளனர்.  பின்னர் கோலேவுக்கு பிராணவாயு செலுத்தப்பட்டது என அவரது மனைவி வருத்தமுடன் கூறியுள்ளார்.

அவர் பல மருத்துவமனைகளின் அழைக்கழிப்பில் உயிரிழந்து உள்ளார் என கூறப்படும் நிலையில், அவர் நகராட்சி கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய தூண்டிய நபரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம் என போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அதுபற்றி விசாரித்து வருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story