வதேராவுக்கு கொரோனா தொற்றியதால் தனிமைப்படுத்திக் கொண்டார்; பிரியங்காவின் தமிழக தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து
கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரியங்கா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பிரசார திட்டம்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் சமீபத்தில் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், மீண்டும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இதில் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) அவரது பிரசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரியங்காவுக்கு தொற்று இல்லைஇந்தநிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பிரியங்காவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருந்த அவரது பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இந்த தகவலை பிரியங்கா வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்நான் கொரோனா அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன். நேற்று (நேற்று முன்தினம்) மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், சில நாட்களுக்கு நான் தனிமையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே துரதிர்ஷ்டவசமாக அசாமில் இன்று (நேற்று), தமிழகத்தில் நாளை (இன்று), கேரளாவில் நாளை மறுநாள் (நாளை) நான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். இதற்காக நான் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சட்டசபை தேர்தலில் நான் மிகச்சிறப்பான பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு, காங்கிரஸ் வெற்றிபெறும் என நம்புகிறேன்.
இவ்வாறு பிரியங்கா கூறியிருந்தார்.
வதேரா அறிக்கைஇதைப்போல அவரது கணவர் வதேரா பேஸ்புக் தளத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நண்பர்களே... துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த ஒருவருடன் நான் தொடர்பில் இருந்துள்ளேன். அதன்மூலம் எனக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அறிகுறி எதுவும் இல்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நானும், பிரியங்காவும் (தொற்று இல்லை எனினும்) தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதிர்ஷ்டவசமாக இந்த நாட்களில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லை என கூறியுள்ள வதேரா, வீட்டில் உள்ள வேறு யாருக்கும் கூட தொற்று இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவோம் என்று அவர் நம்பிக்கையும் வெளியிட்டு இருந்தார்.