அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது; சுகாதார சான்றிதழ் கட்டாயம்


அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது; சுகாதார சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 3 April 2021 11:09 PM IST (Updated: 3 April 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

இமயமலை அமர்நாத் குகைக்கோவில் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது. யாத்திரைக்கு வருபவர்கள் சுகாதார சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பனிலிங்க தரிசனம்

இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் பிரசித்தி பெற்றது. இதனையொட்டி ஆண்டுதோறும் இங்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு, யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் இன்னும் கொரோனா ஓய்ந்தபாடில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

வங்கிகள் மூலம் முன்பதிவு

குகைக்கோவிலுக்கு செல்ல 2 வழிப்பாதைகள் உள்ளன. எந்த வழிப்பாதையை தேர்வு செய்து பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் முன்பதிவு செய்தாக வேண்டும். முன்பதிவுக்காக நாடு முழுவதும் 446 வங்கிக்கிளைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியின் 316 கிளைகள், ஜம்மு-காஷ்மீர் வங்கியின் 90 கிளைகள், எஸ் வங்கியின் 40 கிளைகளில் முன்பதிவை மேற்கொள்ளலாம்.

முன்பதிவு செய்வது எப்படி? பதிவுக்கட்டணம் எவ்வளவு?, யாத்திரையின்போது என்ன என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?, குதிரை வண்டி, பல்லக்கு போன்றவை பற்றிய விவரங்களை www.Shriamarnathjishrine.Com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கோவில் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர்குமார் தெரிவித்து உள்ளார். யாத்திரைக்கான வாய்ப்பு, தனிநபராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார சான்றிதழ்

யாத்திரை செல்ல விரும்புகிறவர்கள் மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு பெறப்பட்ட சுகாதார சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும், சுகாதார சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பம் தரித்து 6 வாரத்துக்கு மேலான பெண்கள் ஆகியோர் யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story