புனே மாவட்டத்தில் தினசரி 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து பா.ஜனதா போராட்டம்


புனே மாவட்டத்தில் தினசரி 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2021 8:23 PM GMT (Updated: 3 April 2021 8:23 PM GMT)

புனே மாவட்டத்தில் தினசரி 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. பஸ் சேவை நிறுத்தப்பட்டதை எதிர்த்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

ஊரடங்கு அமலுக்கு வந்தது

புனே மாவட்டத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே புனே மாவட்ட பொறுப்பு மந்திரியான துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஒரு வார காலத்துக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி மணி நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதன்படி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் ஓட்டல், மதுபான விடுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. ஆன்லைன் உணவு வினியோகத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

பா.ஜனதா போராட்டம்

இதற்கிடையே புனே மாநகர் பஸ் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களும் நிறுத்தப்பட்டது. இதற்கு புனே மாவட்ட பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. புனே பா.ஜனதா எம்.பி. கிரிஷ் பாபத், புனே பா.ஜனதா தலைவர் ஜெயதீஷ் முலிக் உள்ளிட்டோர் சுவர்கேட் பஸ் டெப்போவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பஸ் நிறுத்தம் காரணமாக வேலைக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி கோஷம் போட்டனர்.

இதையடுத்து கிரிஷ் பாபத் எம்.பி., ஜெயதீஷ் முலிக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story