கொரோனா ஒருநாள் பாதிப்பு: உலக அளவில் இந்தியா முதல் இடம்


கொரோனா ஒருநாள் பாதிப்பு: உலக அளவில் இந்தியா முதல் இடம்
x
தினத்தந்தி 4 April 2021 2:27 AM GMT (Updated: 4 April 2021 2:27 AM GMT)

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 89 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மொத்த பாதிப்பு என்பது 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால், ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,998- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் சுமார் 66 ஆயிரம் பேரும், பிரேசிலில் சுமார் 41 ஆயிரம் பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொருத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,931- பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 897 பேரும் இந்தியாவில் 514- பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story