“கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - எடியூரப்பா நம்பிக்கை


“கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 5 April 2021 2:35 AM IST (Updated: 5 April 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கனக மடம் சார்பில் புதிதாக மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அந்த தங்கும் விடுதியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மாநிலத்தில் காலியாக உள்ள மஸ்கி, பசவகல்யாண், பெலகாவி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 3 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. அதுவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்.

அப்போது முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் மற்றும் மந்திரி ஈசுவரப்பா கவர்னருக்கு எழுதிய கடிதம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் முதல்-மந்திரி எடியூரப்பா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

Next Story