மராட்டியத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி


மராட்டியத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி
x
தினத்தந்தி 5 April 2021 2:45 PM IST (Updated: 5 April 2021 2:45 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்படும் என்று நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த சமயத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பிரிவு 144 இன் கீழ் வழங்கப்பட்ட தடை உத்தரவு பகல் நேரத்தில் செயல்படுத்தப்படும். 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். 

வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் கூட்டத்தை அனுமதிக்காவிட்டால் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படும். 

பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்படும். உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகளும் மூடப்படுகின்றன. வீட்டு டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ரெயில்கள், பஸ், டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அவை இயங்கும்.அரசு அலுவலகங்கள் வெறும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும். தொழிற்சாலைகள், காய்கறி சந்தைகள் போன்றவை தரமான கொரோனா கட்டுப்பாட்டு செயல்திட்டங்களுடன் இயங்கும்”  இது போன்ற பல கட்டுப்பாடுகள் மராட்டியத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி

இதற்கிடையே, மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற செய்திகள் பரவலாக எழுந்தன. இந்த நிலையில் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, ”மகாராஷ்டிராவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.  மேலும், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story