பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னரின் கடித நகலை அளிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னரின் கடித நகலை அளிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 April 2021 12:13 AM IST (Updated: 6 April 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு கவர்னர் எழுதிய கடித நகலை அளிக்கக் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீ்வ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் அளிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவருக்கு 30 நாட்கள் பரோல் அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி உத்தரவிட்டது.

இடைக்கால மனு தள்ளுபடி

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல் சார்பில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கவர்னர் அலுவலகத்தில் கிடைத்த கடிதத்தில், கருணைமனு தொடர்பாக முடிவு எடுக்க எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக கடிதத்தின் நகலை வழங்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் அரசு வக்கீலுக்கு மெயில் அனுப்பப்பட்டது. கடித நகல் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், கவர்னரின் கடித நகலை வழங்கக்கோரியும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீடு மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுக்கு உத்தரவு

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், அம்மனுவை பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த பிரதான மனுவுடன் இணைக்கவும் உத்தரவிட்டனர்.பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும், ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்து தமிழக கவர்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Next Story