ரபேல் ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை; பா.ஜனதா மறுப்பு
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என பா.ஜனதா மறுத்துள்ளது.
ரவிசங்கர் பிரசாத்
ரபேல் ஒப்பந்தத்தை பெறுவதற்காக பிரான்சின் டசால்ட் நிறுவனம் இடைத் தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ (சுமார் ரூ.9 கோடி) கொடுத்ததாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கும் நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி இருக்கும் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என பா.ஜனதா கூறியுள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கார்பரேட் போட்டி
ரபேல் ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது. அப்படி இதில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அங்குள்ள கார்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால் வெளியாகி இருக்கலாம்.இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி முன்பு கூட எழுப்பியது. குறிப்பாக இந்த விவகாரத்தை கடந்த 2019-ம் ஆண்டு மிகப்பெரிய பிரச்சினையாக மாற்ற முயன்று தோற்றுப் போனது.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மூலம் விசாரணை நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் ஒப்பந்தத்தில் எந்தவித தவறும் நிகழவில்லை எனக்கூறியது.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Related Tags :
Next Story