இந்தியாவில் ஒரேநாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் பாதிப்பு; புதிய உச்சம் தொட்ட கொரோனா; அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி 8-ந் தேதி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரி களுடன் 8-ந் தேதி (வியாழக்கிழமை) பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் முழு வேகத்துடன் தாக்கி வருகிறது.
இரண்டாவது அலை
இது, இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், சண்டிகார், குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்களில் தொடா்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களை, ‘பெரும் கவலைக்குரிய மாநிலங்கள்’ என்று மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.ஒரு மாதமாக அதிகரித்து வந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு, நேற்று ஒரேயடியாக ஒரு லட்சத்தை தாண்டியது.நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
புதிய உச்சம்
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 97 ஆயிரத்து 894 ஆக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி இது பதிவானது. இதுவரை இதுதான் உச்சபட்ச பாதிப்பாக இருந்தது.இந்தநிலையில், அதையும் தாண்டி முதல் முறையாக புதிய உச்சமாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து 97 ஆயிரத்து 894 என்ற உச்சத்தை எட்ட 76 நாட்கள் ஆனது. ஆனால், தற்போதைய 2-வது அலையில், 20 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, வெறும் 25 நாட்களில் 1 லட்சத்தை எட்டி விட்டது.தினசரி பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளையும் மிஞ்சி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
8 மாநிலங்களில் அதிக பாதிப்பு
தினசரி பாதிப்பில், வழக்கம்போல், மராட்டிய மாநிலத்தில் அதிக அளவாக 57 ஆயிரத்து 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்கார் மாநிலத்தில் 5 ஆயிரத்து 250 பேரும், கர்நாடகாவில் 4 ஆயிரத்து 553 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய நோயாளிகளில் மராட்டியம், சத்தீஷ்கார், கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 81.90 சதவீதம் பேர் உள்ளனர். இதையடுத்து, நாட்டின் மொத்த பாதிப்பு 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 52 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர். இத்துடன், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து82 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 92.80 சதவீதம் ஆகும். கூடுதலாக 50 ஆயிரத்து 233 பேர் சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இதனால், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது. இதன் விகிதம் 5.89 சதவீதம் ஆகும்.
478 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 478 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 8 லட்சத்து 93 ஆயிரத்து 749 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. கடந்த 2-ந் தேதி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் ஆகியோருடன் மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஆலோசனை
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு இந்த ஆலோசனை நடக்கிறது. அப்போது, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், அதிகமான கொரோனா பாதிப்பு உள்ள 11 மாநிலங்களின் சுகாதாரத்துறை மந்திரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
Related Tags :
Next Story