நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிபதிகள் நியமனம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிபதிகள் நியமனம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2021 10:35 PM GMT (Updated: 5 April 2021 10:35 PM GMT)

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நிலுவை வழக்குகளை விசாரிக்க இரு சிறப்பு நீதிபதிகளை நியமித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஊழல்
மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து 1993 முதல் 2010 வரை மத்திய அரசு செய்த 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை 2014-ல் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.மேலும் நிலக்கரி முறைகேடு வழக்குகளில் விசாரணைகளை நடத்துவதற்கு சிறப்பு நீதிபதியாக பரத் பராஷர் நியமிக்கப்பட்டார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் 2014-ம் ஆண்டிலிருந்து இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

ஐகோர்ட்டு பதிவாளர் கடிதம்
இந்நிலையில் சிறப்பு நீதிபதியை மாற்றுவது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டின் பதிவாளர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். 2014-ம் ஆண்டு முதல் நிலக்கரி மோசடி வழக்குகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நீதிபதி பராஷருக்கு பதிலாக மற்றொரு பொருத்தமான நீதித்துறை அதிகாரியை சிறப்பு நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டு நியமிக்க வேண்டும் அல்லது நியமிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பரிசீலித்தது.

நீதிபதி பராஷருக்கு பதிலாக...
அதைத் தொடர்ந்து, நீதிபதி பராஷருக்கு பதிலாக சிறப்பு நீதிபதியாக நியமிக்க விசாரணை கோர்ட்டை சார்ந்த 5 நீதிபதிகளின் பெயர்களை வழங்குமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் மார்ச் 15-ந்தேதி கோரியிருந்தது.சிறப்பு நீதிபதியாக பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் செயல்பட்ட பரத் பராஷரை மாற்றவேண்டிய தேவை உள்ளது. அவர் கடந்த 2014, ஆகஸ்டு 19-ந்தேதி முதல் மேற்கூறிய கோர்ட்டில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அதே பதவியில் 6 ஆண்டுகள் இருந்துள்ளார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, சுமார் ஐந்து நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.மேலும் இதுபோன்ற வழக்குகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். இது தலா 6 மாத காலத்துக்கு நான்கு முறை நீட்டிக்கப்படலாம் என அரசு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தார்.

2 சிறப்பு கோர்ட்டுகள்
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது மூத்த வக்கீல் ஆர்.எஸ்.சீமா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தற்போது 41 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என வாதிட்டார்.அந்த வாதத்தை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஏற்பதாக தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நிலுவை வழக்குகளை விசாரிப்பதற்காக 2 சிறப்பு கோர்ட்டுகளை அமைத்து, அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகிய இருவரையும் சிறப்பு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டனர்.

Next Story