மருத்துவமனையில் தரமற்ற உணவு: ஒப்பந்ததாரரை மராட்டிய மந்திரி அடித்ததால் பரபரப்பு + "||" + Maharashtra Minister "Slaps" Contractor Over Hospital Food Quality
மருத்துவமனையில் தரமற்ற உணவு: ஒப்பந்ததாரரை மராட்டிய மந்திரி அடித்ததால் பரபரப்பு
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரரை மந்திரி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
மராட்டிய மநிலம் அகோலா மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்று இருந்ததால், ஒப்பந்ததாரரை மந்திரி பச்சு கடு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: - அகோலா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேற்று மதியம் மாநில மந்திரி பச்சு கடு திடீரென வருகை தந்தார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்த மந்திரி கடு, உணவு தரமற்று இருப்பதை அறிந்தார்.
உடனே உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நேரில் வரவழைத்து விளக்கம் கோரினார். ஒப்பந்ததாரரின் பதிலில் திருப்தி அடையாத மந்திரி, அவரை நிகழ்விடத்திலேயே அடித்தார். இந்தக் காட்சிகள் மராட்டியத்தின் உள்ளூர் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.
இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மந்திரி கடு, “நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட சப் டிவிஷனல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் தானியங்கள் கையிருப்பு உணவு விநியோகம் குறித்த பதிவேடும் பராமரிக்கப்படவில்லை” என்றார்.