ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஊழல்: கர்ம வினையில் இருந்து யாரும் தப்ப முடியாது- ராகுல்காந்தி
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 2016ல் போடப்பட்டது. இதன்படி, ஏற்கனவே 11 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இவை தற்போது, அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் சமீபத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட போது, இந்த விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி 4 வது தொகுதி 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. கடந்த வாரம் புதன்கிழமை மாலை அவை இந்தியா வந்தடைந்தன. இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஐந்து ரபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி ஜூலை 29 அன்று இந்தியா வந்து சேர்ந்தது.நவம்பர் 3 ம் தேதி மூன்று ரபேல் ஜெட் விமானங்களின் இரண்டாவது தொகுதி இந்தியாவுக்கு வந்தது. மூன்றாவது தொகுதி ஜனவரி 27 அன்று வந்து சேர்ந்தது.
இது தவிர, மேலும் 7 ரபேல் விமானங்கள் இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவை வந்து சேர்ந்த பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயரும். மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதன் மூலம், இந்தியாவிடம் விமானப்படை பெரும் பலத்தை பெறும்.
இந்த ரபேல் நிலையில் விமான உற்பத்தியாளரால் 1.1 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ 9 கோடி) ஒரு இடைத்தரகருக்கு வழங்கப்பட்டதாக ஒரு பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று நிராகரித்தார், மேலும் காங்கிரஸ் கட்சி இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது என்று கூறினார்.
ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டுவதால் ரபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
Karma = The ledger of one's actions.
— Rahul Gandhi (@RahulGandhi) April 6, 2021
Nobody escapes it.#Rafale
Related Tags :
Next Story