தங்கள் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப சில மாநில அரசுகள் முயற்சிக்கின்றன - மத்திய சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தங்கள் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப சில மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 01 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 43 ஆயிரத்து 473- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474- ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், உடனடியாக அவற்றை அனுப்பி வைக்கும்படியும் மத்திய அரசுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளதாக சில மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. ஆனால், மாநில அரசுகளுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத்தில் தங்கள் தோல்வியில் இருந்து கவனத்தை திசைதிருப்ப சில மாநில அரசுகள் வேண்டுமென்றே முயற்சிக்கின்றன. மேலும், மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கவும் முயற்சிக்கின்றன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகாலை பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளபோதிலும் சத்தீஸ்கர் அரசு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த மறுக்கிறது. அதுமட்டுமின்றி அம்மாநில அரசின் சில தலைவர்களும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக தயக்கத்தை உண்டாக்குகின்றனர்.
பல மாநில அரசுகள் தங்கள் சுகாதார துறையின் உள்கட்டமைப்புகளை உயர்த்தவேண்டும். கொரோனா பரிசோதனையின் தரம் கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மேம்படுத்தப்பட வேண்டும். பஞ்சாபில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கொரோனா நோயாளிகளை முன்னதாக கண்டறிந்து தேவையான சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அங்கு கொரோனா இறப்பு விகிதம் குறையும்’ என்றார்.
Related Tags :
Next Story