கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க முடிவு - துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்


கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க முடிவு - துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்
x
தினத்தந்தி 8 April 2021 2:52 AM GMT (Updated: 8 April 2021 2:52 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் இன்னும் 2 நாட்களில் இயல்புநிலை திரும்பும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 7-ந் தேதி(நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையொட்டி பெங்களூரு, மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, ஹாவேரி, கதக், பெலகாவி, கலபுரகி, தட்சிணகன்னடா, உடுப்பி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு ஆஜராகவில்லை. இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. 

இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் இயல்புநிலை திரும்பும் என்றும் கர்நாடக துணை முதல்வர் லட்சுமண் சவதி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகத்தில் தனியார் பஸ்கள் இயங்க அனுமதி வழங்கியுள்ளோம். தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசின் அனுமதியை பெற தேவை இல்லை. பஸ்கள் இருந்தால் அவர்களாகவே அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்து போக்குவரத்து சேவையை வழங்கலாம். மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையை வழங்க உள்ளன.

அதனால் அடுத்த 2 நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். 10-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு ஆஜராக வேண்டும்” என்று அவர் கூறினார்.

Next Story