சத்தீஸ்கார்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை விடுதலை செய்த நக்சலைட்டுகள்...
சத்தீஸ்கார் என்கவுண்டரின்போது கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை நக்சலைட்டுகள் இன்று விடுதலை செய்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டர் தாக்குதலின் போது பாதுகாப்புபடையின் ‘கோப்ரா’ கமாண்டோ படை பிரிவை சேர்ந்த வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆனால், பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நக்சலைட்டுகள் தெரிவித்தன. மேலும், அந்த வீரரின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர். மேலும், ராகேஷ்வர் சிங் மன்ஹஸை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் என்றும் நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நக்சலைட்டுகள் பிடியில் இருந்த பாதுகாப்பு படை வீரரை மீட்கும் நடவடிக்கையில் சத்திஸ்கார் மாநில அரசு 2 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது.
அந்த குழு நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸை நக்சலைட்டுகள் இன்று விடுதலை செய்தனர்.
பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஜம்முவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story