ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா’ - பிரதமர் மோடி அழைப்பு


ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா’ - பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 8 April 2021 10:16 PM IST (Updated: 8 April 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 11 முதல் 14 வரை தகுதியுடைய எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியுமோ அத்தனை பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கடுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக்கூட்டத்தின் பிரதமர் மோடி பேசியதாவது,

சிறிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 'இரவு நேர ஊரடங்கு’ அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கையை வெளிப்படுத்த ‘கொரோனா ஊரடங்கு’என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

நமது ஆலோசனையின் போது இறப்பு விகிதம் பற்றி நாம் விவாதித்தோம். இறப்பு விகிதம் குறைவாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் வைத்திருக்க வேண்டும். அது உயிரை காப்பாற்ற உதவும்.

ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடலாமா?. இந்த நாட்களில் தகுதியான நபர்கள் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நாம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் எதையும் வீணாகக்கூடாது என்பதே நமது இலக்கு.

முகக்கவசம் அணிதல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதின் அவசியம் குறித்து நாம் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்று நமக்கு என்ன பிரச்சினை என்றால் நாம் கொரோனா பரிசோதனையை மறந்துவிட்டு தடுப்பூசி நோக்கி சென்றுவிட்டோம். தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவுக்கு எதிராக வெற்றிப்பெற்றுள்ளோம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

நம்மிடம் உள்ள தடுப்பூசிகளை வைத்தே நாம் தடுப்பூசி வினியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசியை வைத்துவிட்டு நாம் வைரசை கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு யோசிப்பதும் சரியல்ல. ஒட்டுமொத்த நாட்டை பற்றி சிந்தித்து நிர்வகிக்க வேண்டும்’ என்றார்.

Next Story