கடையடைப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு மாநிலம் முழுவதும் ஓட்டல், உணவக ஊழியர்கள் அமைதி போராட்டம் அரசுக்கு உருக்கமான கோரிக்கை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 8 April 2021 6:54 PM GMT (Updated: 8 April 2021 6:54 PM GMT)

கொரோனாவால் கடைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியம் முழுவதும் ஓட்டல், உணவகங்களின் ஊழியர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்தனர்.

மும்பை
கொரோனாவால் கடைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியம் முழுவதும் ஓட்டல், உணவகங்களின் ஊழியர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்தனர். 
அமைதி போராட்டம் 
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மராட்டிய அரசு அத்தியாவசிய தேவைக்கான கடைகளை தவிர ஓட்டல்கள், உணவகங்கள் உள்பட அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. 
இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 
இந்த நிலையில் ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மராட்டிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஓட்டல் மற்றும் உணவக ஊழியர்கள் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளுடன் சாலையில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து ஓட்டல் மற்றும் உணவகங்கள் கூட்டமைப்பு தலைவர் செர்ரி பாட்டியா கூறியதாவது:-
முழு துயரம் மேலானது
ஓட்டல் துறை நியாயம் மற்றும் நீதியை கோருகிறது. நாங்கள் அரசிடம் கொரோனா விதிமுறைகளுடன் எங்களை வழக்கம்போல செயல்பட அனுமதியுங்கள் அல்லது நிரந்தரமாக எங்களுக்கு தடை விதித்துவிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு பாதி உயிருடன் வைத்திருப்பதை விட முழு துயரத்தில் தள்ளிவிடுவது மேலானது. 
பெரும்பாலான நிறுவனங்கள் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் நொடிந்துள்ளதால் மில்லியன் கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டை போலவே வேலையிழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பலர் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். 
தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்த ஆர்பாட்டத்தின் மூலம் மீண்டும் எங்கள் வேலையை தொடர்ந்து செய்ய அனுமதிக்குமாறு அரசை கோரியுள்ளோம். இல்லையெனில் அரசு தான் எங்களின் வருமானங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். 
நிறுவனங்களுக்கு அனைத்து வகையான கட்டணங்கள் மற்றும் வரிவிதிப்பில் இருந்து முழுமையான தள்ளுபடி அறிவிக்கவேண்டும். 
மேலும் தடை காலத்தில் நீர் மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.  

Next Story