இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரஷியாவில் இருந்து 20 டன் மருந்து ெபாருட்கள் டெல்லி வந்தன - அமெரிக்காவும் ரூ.740 கோடிக்கு தளவாடங்கள் அனுப்ப முடிவு


இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரஷியாவில் இருந்து 20 டன் மருந்து ெபாருட்கள் டெல்லி வந்தன - அமெரிக்காவும் ரூ.740 கோடிக்கு தளவாடங்கள் அனுப்ப முடிவு
x
தினத்தந்தி 29 April 2021 9:24 PM GMT (Updated: 29 April 2021 9:24 PM GMT)

இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரஷியாவில் இருந்து 20 டன் மருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்கள் நேற்று டெல்லி வந்து சேர்ந்தன. இதைப்போல அமெரிக்காவும் ரூ.740 கோடி மதிப்பிலான ெபாருட்களை விரைவில் அனுப்புகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த வரிசையில் ரஷியாவில் இருந்து நேற்று 2 விமானங்களில் 20 டன் மருத்துவ பொருட்கள் டெல்லி வந்து சேர்ந்தன. இதில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.

இந்த தகவலை இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலே குதாசேவ் தெரிவித்தார். கொரோனாவால் இந்தியா எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழலை ரஷியா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய குதாசேவ், இரு நாடுகளும் இணைந்து எதிர்க்க வேண்டிய களங்களில் இதுவும் ஒன்று எனக் கூறினார்.

முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விவரித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து ரஷியா இந்த மருத்துவ உதவியை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் இந்த மனிதாபிமான உதவிக்கு இந்தியா நன்றி தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமெரிக்காவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், முககவசங்கள் என பல்வேறு மருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்கள் அங்கிருந்து இந்தியா வந்து சேர்ந்து இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து வருகிற நாட்களில் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.740 கோடி) மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்து உள்ளது.

இதைத்தவிர 2 கோடி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி டோஸ்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், இன்னும் ஏராளமான ஆக்சிஜன் டேங்குகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன் இந்தியாவில் உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் நிறுவுவதற்கான ஆக்சிஜன் அலகுகளை அனுப்ப இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கு உயர்மட்ட மருத்துவக்குழு ஒன்றும் இந்திய மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆக்சிஜன் தொடர்பான தளவாடங்களை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா கூறியுள்ளார்.

அந்தவகையில் 550 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 4 ஆயிரம் செறிவூட்டிகள், 10 ஆயிரம் சிலிண்டர்களை வெளிநாடுகளில் இருந்து பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இதைப்போல எகிப்தில் இருந்து 4 லட்சம் யூனிட் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அமீரகம், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் இவற்றை பெறுவதற்கு ஆலோசித்து வருவதாகவும் சிரிங்லா கூறினார்.

கொரோனாவால் வரலாறு காணாத மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு உதவுவதற்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந்திருப்பதாகவும் சிரிங்லா தெரிவித்தார்.

Next Story