அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு ‘ஆயுஷ்-64’ மருந்து பயனுள்ளது - மத்திய அரசு தகவல்


அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு ‘ஆயுஷ்-64’ மருந்து பயனுள்ளது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 29 April 2021 10:58 PM GMT (Updated: 29 April 2021 10:58 PM GMT)

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி, 

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இணைந்தது ‘ஆயுஷ்’ துறை ஆகும். மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கென தனி அமைச்சகம் உள்ளது.

அந்த அமைச்சகத்தின் தலைமை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் சோப்ரா நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1980-ம் ஆண்டு, மலேரியாவை குணப்படுத்துவதற்கு என ‘ஆயுஷ்-64’ என்ற மருந்து உருவாக்கப்பட்டது. அந்த மருந்து, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமா என்று 3 மையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது.

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், வார்தாவில் உள்ள தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிலையம், மும்பையில் உள்ள மாநகராட்சி கொரோனா மையம் ஆகிய மையங்களில் தலா 70 நோயாளிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், வழக்கமான கவனிப்புடன் ‘ஆயுஷ்-64’ மருந்தை கொடுத்தால், அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கொரோனா பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பொது சுகாதாரம், களைப்பு, கவலை, மன அழுத்தம், பசி, மகிழ்ச்சி, தூக்கம் போன்றவற்றில் இந்த மருந்து முக்கியத்துவம் வாய்ந்த, நல்ல விளைவுகளை அளிப்பதும் உணரப்பட்டது.

கொரோனா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேசிய நிபுணர் குழுவும் இதை அங்கீகரித்துள்ளது. இந்த மருந்தை லேசான பாதிப்பு கொண்டவர்களுக்கு பயன்படுத்த சிபாரிசு செய்துள்ளது. இதுவரை இம்மருந்து பாதுகாப்பானது என்றே முடிவுகள் வந்துள்ளன.

இருப்பினும், ஆக்சிஜன் பயன்படுத்தும் அளவுக்கு நோய் தீவிரம் அடைகிறதா என்பதை அறிய ‘ஆயுஷ்-64’ மருந்து பயன்படுத்திய நோயாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story