18 வயதானோருக்கு தடுப்பூசி: முதல் நாளில் 86 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி; மாநிலங்களிடம் 78 லட்சம் டோஸ் கையிருப்பு


18 வயதானோருக்கு தடுப்பூசி: முதல் நாளில் 86 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி; மாநிலங்களிடம் 78 லட்சம் டோஸ் கையிருப்பு
x
தினத்தந்தி 2 May 2021 9:08 PM GMT (Updated: 2 May 2021 9:08 PM GMT)

18 வயதானோருக்கு தடுப்பூசிபோடும் 3-ம் கட்ட திட்டத்தில், முதல் நாளில் 86 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். மாநிலங்களிடம் 78 லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளது.

3-ம் கட்ட திட்டத்தின் முதல் நாள்...
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயது கடந்தோரைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி 1-ந் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இது 11 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.திட்டத்தின் முதல் நாளில் 18-44 வயதானோரில் 86 ஆயிரத்து 23 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

அந்த மாநிலங்கள் வருமாறு (தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கையுடன்):-

சத்தீஷ்கார்-987, டெல்லி-1472, குஜராத் 51,622, காஷ்மீர்- 201, கர்நாடகம்-649, மராட்டியம்-12,525, ஒடிசா-97, பஞ்சாப்-298, ராஜஸ்தான்-1,853, தமிழகம்-527, உத்தரபிரதேசம்-15,782 ஆகும்.

ஒட்டுமொத்தமாக 15.68 கோடி பேர்
இதுவரை (நேற்று காலை 7 மணி நிலவரம்) நாட்டில் ஒட்டுமொத்தமாக 15 கோடியே 68 லட்சத்து 16 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா தடுப்பூசிபோடப்பட்டுள்ளது.சுகாதார பணியாளர்களில் 94 லட்சத்து 28 ஆயிரத்து 490 பேர் முதல் டோசும், 1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 529 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர். முன்கள பணியாளர்களில் 1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 529 பேர் முதல் டோஸ், 69 லட்சத்து 22 ஆயிரத்து 93 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 26 லட்சத்து 18 ஆயிரத்து 135 பேர் முதல் டோசும், 1 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 310 பேர் இரண்டாவது டோசும் பெற்றுள்ளனர்.45-60 வயது பிரிவினரில் 5 கோடியே 32 லட்சத்து 80 ஆயிரத்து 976 பேர் முதல் டோஸ், 40 லட்சத்து 8,078 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

10 மாநிலங்கள்
இதுவரை தடுப்பூசி செலுத்தியோரில் 67 சதவீதத்தினர் மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா, பீகார், ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.மே 1-ந் தேதி மட்டும் 18 லட்சத்து 26 ஆயிரத்து 219 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 11 லட்சத்து 14 ஆயிரத்து 214 பேர் முதல் டோசும், 7 லட்சத்து 12 ஆயிரத்து 5 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

கையிருப்பு 78 லட்சம் தடுப்பூசி
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் 16 கோடியே 54 லட்சத்து 93 ஆயிரத்து 410 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. வீணானது உள்பட மொத்தம் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 631 ஆகும்.தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கைகளில் 78 லட்சத்து 60 ஆயிரத்து 779 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

அடுத்த 3 நாளில் அவற்றுக்கு 56 லட்சத்து 20 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

Next Story