மராட்டியத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம்? முடிவு செய்ய கமிட்டி
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்பதை முடிவு செய்ய மூத்த டாக்டர்கள் அடங்கிய கமிட்டியை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.
முதல்-மந்திரி உத்தரவு
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது சுமார் 6¾ லட்சம் பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன் தினம் மும்பை பெருநகரம், புனே பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவா் ஒருவேளை 3-வது கொரோனா அலை தோன்றினால் அது குழந்தைகளையும் பாதிக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.
எனவே அதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அவர் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.
கமிட்டி அமைக்கப்படும்மேலும் முதல்-மந்திரி மாநிலத்தில் உள்ள மூத்த டாக்டர்கள், நிபுணர்கள் அடங்கிய கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர் வீடுகளில் தனிமைப்பட்டவர்களை எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும், ரெம்டெசிவிர் பயன்பாடு, ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட முடிவுகளை எடுப்பார்கள்.
இதேபோல மாநிலம் முழுவதும் இருந்து டாக்டர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான சந்தேகங்களை 24 மணி நேரமும் இந்த கமிட்டியினரை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். தனிமைப்படுத்தப்பட்டவர்களை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்காததால் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மாநிலத்தில் இந்த கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.