முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைப்பு


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 3 May 2021 5:44 PM IST (Updated: 3 May 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் முன்னோடியில்லாத வகையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், போதுமான மனித வளங்களின் தேவை அதிகரித்து வருவது குறித்து  பிரதமர் நரேந்திர மோடி  ஆய்வு செய்தார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்  தேர்வை  குறைந்தது 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆகஸ்ட் 30 க்கு முன்னர் தேர்வு நடத்தப்படாது. தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்

கொரோனா பேரிடருக்கு எதிரானப் போரில் மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்கும் பல்வேறு முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளார்.

100 நாள்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு, மத்திய அரசின் நிரந்தர பணி வாய்ப்பின் போது முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவப் பயிற்சியாளர்கள், அவர்களது பேராசிரியர்களின் கண்காணிப்பின் கீழ், கொரோனா மேலாண்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், லேசான தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்குவது அல்லது கொரோனா நோயாளிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தவும், தகுதிவாய்ந்த செவிலியரகள், முழு நேர கொரோனா பணியில், அவர்களது மூத்த செவிலியர்கள் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 100 நாள்கள் கொரோனா முன்களப் பணியாற்றும் மருத்துவத் துறையினருக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைக்குரிய கொரோனா தேசிய சேவை சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story