மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு


மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 5:44 PM IST (Updated: 3 May 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மருத்துவ மேற்படிப்புக்கான முதுகலை நீட் தேர்வை 4 மாதங்களுக்கு தள்ளிவைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். முதுகலை நீட் தேர்வு குறைந்தது 4 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

100 நாட்கள் கொரோனா தடுப்பு பணியை நிறைவு செய்த மருத்துவ பணியாளர்களுக்கு அரசு பணி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி மருத்துவர்கள் அவர்களின் ஆசிரியர்களின் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர். இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மேற்பார்வையில் லேசான அறிகுறியுடைய கொரோனா நோயாளிகளை கண்காணித்தல் மற்றும் தொலைபேசி மூலம் அறிவுரை கூறுதல் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்படுவர். 

மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மேற்பார்வையில் பிஎஸ்சி-ஜிஎன்எம் படிப்பு தகுதி பெற்ற செவிலியர்கள் முழு நேர கொரோனா தடுப்பு செவிலியர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 

100 நாட்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்களுக்கு பிரதம மந்திரியின் கோவிட் தேசிய சேவை கௌரவம் வழங்கப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story