லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர்


லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர்
x
தினத்தந்தி 3 May 2021 1:41 PM GMT (Updated: 3 May 2021 1:41 PM GMT)

லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் நன்மையும் இல்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சி.டி. ஸ்கேன் எடுக்கின்றனர். இந்நிலையில், சி.டி. ஸ்கேன் எடுப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சி.டி. ஸ்கேன் மற்றும் பயோமேக்கர்ஸ் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை. ஒரு முறை சி.டி.ஸ்கேன் எடுப்பது 300 முறை எக்ஸ் ரே எடுப்பதற்கு சமம். அது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. 

தற்போதைய பரிந்துரைகள் என்னவென்றால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்தால் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும்’ என்றார். 

Next Story