3.68 லட்சம் பேருக்கு கொரோனா: இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் சரிவு


3.68 லட்சம் பேருக்கு கொரோனா: இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் சரிவு
x
தினத்தந்தி 3 May 2021 7:04 PM GMT (Updated: 3 May 2021 7:04 PM GMT)

இந்தியாவில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ேநற்று சரிந்து இருக்கிறது. ஒரு நாளில் 3.68 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தொற்று குறைகிறது

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. இதில் உச்சபட்சமாக கடந்த 1-ந்தேதி 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் வெறும் 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு அதிர்ச்சியளித்து இருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பீதியளித்து இருந்த நிலையில், மறுநாளே இது குறையத்தொடங்கியது. அதாவது நேற்று முன்தினம் புதிய பாதிப்புகள் 3.92 லட்சமாக குறைந்தது.

இது நேற்று மீண்டும் சரிந்து விட்டது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 68 லட்சத்து 147 என்ற அளவிலேயே இருந்தது. இது மருத்துவத்துறைக்கு சற்றே ஆறுதலை அளித்து இருக்கிறது.

2 கோடியை நெருங்கியது

புதிதாக பாதிக்கப்பட்ட இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி விட்டது. அதாவது. 1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604 பேர் இதுவரை கொரோனாவின் கொடூர கரங்களில் சிக்கியிருக்கின்றனர். புதிதாக ஏற்பட்ட பாதிப்புகளில் 73.78 சதவீதம் பேர் மராட்டியம், கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பாக மராட்டியத்தில் மட்டுமே 56,647 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடகாவில் 37,733 பேரும், கேரளாவில் 31,959 பேரும் தொற்றுக்கு சிக்கியிருக்கிறார்கள்.

பலி எண்ணிக்கையும் சரிவு

நேற்றுமுன்தினத்தை ஒப்பிடுகையில் நேற்றைய பலி எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3,689 பேர் ஒரேநாளில் பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 3,417 ஆக குறைந்திருந்தது.

இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் தேசிய பலி விகிதம் 1.10 சதவீதமாக குறைந்திருக்கிறது. நேற்றைய மரணங்களில் சுமார் 75 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 669 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து டெல்லி 407 உயிரிழப்புகளையும், உத்தரபிரதேசம் 288 மரணங்களையும் கொண்டிருக்கிறது.

3 லட்சம் பேர் மீண்டனர்

இதற்கிடையே 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 732 பேர் கொரோனாவை வென்று உயிர் பிழைத்திருக்கின்றனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 3 ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டின் குணமடைந்தோர் விகிதம் 81.77 ஆக நீடிக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பில் 17.13 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் 63 ஆயிரத்துக்கு அதிகமானோர் அதிகமாகும்.

பரிசோதனைகள் அதிகரிப்பு

சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளில் 81.46 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

நாடு முழுவதும் தினந்தோறும் 15 லட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன. விடுமுறை தினமான நேற்று முன்தினமும் 15,04,698 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 29.16 கோடியாக உயர்ந்து விட்டது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Next Story