தேசிய செய்திகள்

3-வது முறையாக மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு + "||" + Mamata Banerjee will be sworn in as West Bengal Chief Minister for the 3rd time tomorrow

3-வது முறையாக மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு

3-வது முறையாக மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு
மேற்கு வங்காளத்தில் 3-வது முறையாக முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை (புதன்கிழமை) பதவியேற்கிறார்.

முதல்-மந்திரியாக தேர்வு

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. ஆளுங்கட்சிக்கு பலத்த போட்டியாக கருதப்பட்ட பா.ஜனதா 77 இடங்களை பெற்றது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் நேற்று தொடங்கி விட்டது.

அந்தவகையில் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது. இதில் கட்சியின் சட்டமன்ற தலைவராக (முதல்-மந்திரி) மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப்போல தற்போதைய சபாநாயகர் பீமன் பானர்ஜி, புதிய சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார்

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை (புதன்கிழமை) பதவியேற்கிறார். இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 3-வது முறையாக அவர் முதல்-மந்திரி அரியணையை அலங்கரிக்கிறார். முன்னதாக நேற்று இரவு அவர் கவர்னர் ஜெகதீப் தங்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

கொரோனா பரவல் காரணமாக புதிய அரசின் பதவியேற்பு விழா எளிமையாக நடத்தப்படும் என ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைப்போல புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி 6-ந்தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார்.

மறுவாக்கு எண்ணிக்கை

இதற்கிடையே தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கோர்ட்டை நாட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக மம்தா பானர்ஜி முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் இதை திரும்பப்பெற்ற தேர்தல் கமிஷன், சுவேந்து அதிகாரி 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இதனால் அந்த தொகுதயில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதை எதிர்த்து கோர்ட்டை அணுக உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு ஆதரவு

நந்திகிராம் தேர்தல் முடிவை முறைப்படி அறிவித்தபிறகு, தேர்தல் கமிஷன் மாற்றியமைத்தது. எனவே இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டுக்குப் போவோம். கம்ப்யூட்டர் ‘சர்வர்’ ஏன் 4 மணி நேரம் பழுதடைந்திருந்தது? மக்களின் தீர்ப்பை ஏற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் ஓரிடத்தில் மட்டும் முரண்பாடு இருந்தால், அதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது. அந்த உண்மை எங்களுக்கு தெரிய வேண்டும்.

நந்திகிராம் தேர்தல் நடத்தும் அதிகாரி உயிருக்கு பயந்தே மறுவாக்கு எண்ணிக்கைக்கான உத்தரவை கொடுக்கவில்லை. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர் அனுப்பிய செய்தி கிடைத்துள்ளது. தேர்தல் கமிஷன் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் பா.ஜனதா கட்சி 50 இடங்களை கூட வென்றிருக்காது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

அப்போது அவர் நந்திகிராம் தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியதாக கூறப்படும் குறுந்தகவலையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்காள முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார்.