கர்நாடகாவில் 24 பேர் உயிரிழந்த விவகாரம்; அரசின் படுகொலை என சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, முதல் மந்திரி எடியூரப்பா மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்புடைய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றும் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான சித்தராமையா, கர்நாடகாவில் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, அது வெறும் மரணம் அல்ல. அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை. இந்த மரணங்கள் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறேன். உண்மை வெளிவரட்டும் என கூறியுள்ளார்.
இதன்பின் டுவிட்டரில் சித்தராமையா வெளியிட்ட பதிவில், அரசு செய்த படுகொலைகளுக்காக முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் சுகாதார மந்திரி கே. சுதாகர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது என தொடர்ச்சியாக அவசர அழைப்புகள் வந்தபடி உள்ளன. சாமராஜநகர் மருத்துவமனையில் நடந்தது போல் மற்றொரு சம்பவம் நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு வாழ்வும் விலைமதிப்பற்றது.
எனவே, அரசால் தொடர்ந்து படுகொலைகள் நடக்காமல் தடுக்க முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் சுகாதார மந்திரி கே. சுதாகர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
எனினும் அவர்களில் 18 பேர் இணை நோய் கொண்டவர்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. இதுபற்றி அடுத்த 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி அரசு கேட்டு உள்ளது.
Related Tags :
Next Story