மத்திய அரசு அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்


மத்திய அரசு அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 May 2021 6:09 PM IST (Updated: 4 May 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு தங்களிம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் மக்கள் பல இடங்களில் அவதிக்குள்ளாகினர். இந்த சூழலில் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க பல நாடுகள் முன்வந்து உதவி செய்து வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் தங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்கள் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நேரத்தில், ​​செண்ட்ரல் விஷ்டா திட்டத்தின் மூலம் 13,000 கோடி செலவில் பிரதமருக்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கு பதிலாக, மத்திய பாஜக அரசு மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் அனைத்து வளங்களையும் செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய செலவுகள் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் வேறு திசையில் உள்ளன என்று மக்களுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கும் என பிரியங்கா காந்தி தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

Next Story