கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து பாதிப்பு; ஐ.பி.எல். தொடர் ஒத்திவைப்பு; வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல்


கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து பாதிப்பு; ஐ.பி.எல். தொடர் ஒத்திவைப்பு; வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல்
x
தினத்தந்தி 4 May 2021 9:29 PM GMT (Updated: 4 May 2021 9:29 PM GMT)

கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது.கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள்பங்கேற்று மோதின.

வீரர்களுக்கு கொரோனா
இதில் முதற்கட்ட ஆட்டங்கள் சென்னை மற்றும் மும்பையில் நடந்தது. அடுத்த சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத், டெல்லியில் நடந்து வந்தது. மொத்தமுள்ள 60 ஆட்டங்களில் 29 லீக் ஆட்டங்கள் எந்த பாதிப்பும் இன்றி நடந்து முடிந்தது. கடைசியாக கடந்த 2-ந்தேதி நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது.புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) அடுத்த இடங்களிலும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் (4 வெற்றி, 3 தோல்வி) 4-வது இடம் வகிக்கிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஐ.பி.எல். அணிக்குள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் ஊடுருவி அச்சுறுத்தியது. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். ஒரு அணியில் வீரர் மற்றும் நிர்வாகிகள் கொரோனாவினால் சிக்கினால் அனைவரும் உடனடியாக 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், இந்த சமயத்தில் 3 முறை சோதனை நடத்தி பாதிப்பு இல்லை என்பது குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டும் என்பது கொரோனா வழிகாட்டி நெறிமுறையாகும். இதையடுத்து அந்த அணி வீரர்கள் ஓட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு ஆட்டம் ரத்தானது.

அதிர்ச்சியும், கலக்கமும்
அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் அவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர். தங்களுக்குரிய அடுத்த ஆட்டத்தில் விளையாட இயலாது என்றும் கூறி விட்டனர்.இதற்கிடையே ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, டெல்லி அணியின் மூத்த 
சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் பரிசோதனையில் கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

பலத்த கெடுபிடிகளுடன் அமல்படுத்தப்பட்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தையும் மீறி 4 அணிகளில் கொரோனா புகுந்து ஆட்டுவித்ததால், மற்ற அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர். அத்துடன் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு சென்று அடுத்தகட்ட லீக் ஆட்டங்களில் விளையாட சில அணிகள் தயக்கம் காட்டின. இதனால் அனைத்து ஆட்டங்களையும் ஒரே இடமான மும்பைக்கு மாற்றலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது. ஆனால் குறுகிய காலத்தில் மாற்றுவது சாத்தியமில்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

காலவரையின்றி தள்ளிவைப்பு
இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்புதாரர்கள் ஆகியோரிடம் நேற்று பிற்பகல் இ்ந்திய கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் போட்டியில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன் கருதி ஐ.பி.எல். கிரிக்கெட்டை காலவரையின்றி தள்ளிவைப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சி உதவியாளர்கள், நடுவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் எந்தவித சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு ஐ.பி.எல். போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கடினமான காலக்கட்டத்தில் அதுவும் இந்தியாவில் மக்களிடையே கொஞ்சம் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் கொண்டு வர முயற்சித்தோம். இருப்பினும் வேறுவழியின்றி போட்டியை இப்போது நிறுத்தி வைக்க வேண்டியதாகி விட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்து வீடு திரும்புவதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து கொடுக்கும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இ்ந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் 
சுக்லா கூறுகையில், ‘2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசன் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. வீரா்களின் உடல்நிலை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீண்டும் போட்டியை எப்போது நடத்துவது என்பதை பார்ப்போம். போட்டி ரத்து செய்யப்படவில்லை. இப்போதைக்கு நிறுத்தப்பட்டு உள்ளது அவ்வளவு தான்’ என்றார்.

இழப்பு எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் நடந்து வருகிறது. 2009-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டி தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டில் இதே காரணத்துக்காக தொடக்ககட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 13-வது ஐ.பி.எல். போட்டி முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த முறையும் அமீரகத்துக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அபாயகரமான கட்டத்தை அடைந்து எகிறிய போதிலும் ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்துவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டியது. அதன்படி போட்டி தொடங்கப்பட்டு இப்போது பாதியில் நிற்கிறது. ஐ.பி.எல். போட்டி பாதியில் நிறுத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் நிகழ்வாகும்.

ஐ.பி.எல். போட்டியை நடத்துவதால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மற்றும் இதர விளம்பர ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் நடத்த முடியாமல் போனால் மிகப்பெரிய இழப்பீட்டை சந்திக்க வேண்டியது வரும்.

வெளிநாட்டு வீரர்களுக்கு சிக்கல்
ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், கம்மின்ஸ் உள்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், வர்ணனையாளர்கள் என்று மொத்தம் 40 ஆஸ்திரேலியர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கெடுத்திருந்தனர். இந்தியாவில் இருந்து விமான சேவைக்கு மே 15-ந்தேதிவரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் 
ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளனர். அதன் பிறகு அவர்கள் சொந்த நாட்டுக்கு கிளம்ப திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக வழியனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து வீரர்களை பொறுத்தவரை தாயகம் திரும்புவதில் பிரச்சினை இல்லை. ஆனால் அங்கு சென்றதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ஆபத்து
ஐ.பி.எல். போட்டி ஒத்திவைப்பு மூலம் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 9 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்குரிய முன்னோட்டமாகத்தான் ஐ.பி.எல். தொடர் பார்க்கப்பட்டது. கொரோனா மிரட்டலால் தற்போது ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. அந்த சமயத்தில் கொரோனா 3-வது அலை வரலாம் என்று பேசப்படுகிறது.

அனேகமாக மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்க உள்ளது.

Next Story