கொரோனா பணி; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஓராண்டாக சம்பளம் இல்லை: பிரதமருக்கு கடிதம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நேபாளம் உள்ளிட்ட 65 வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்களுக்கு ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய மருத்துவர்களுடன் இணைந்து வெளிநாட்டு மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற கூடியவர்களில் நேபாளம் உள்ளிட்ட 65 வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பள பணம் வழங்கவில்லை என கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி பயிற்சி மருத்துவர்களுக்கான கூட்டமைப்பு (ஆர்.டி.ஏ.) பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், நேபாள நாட்டின் மருத்துவர்களுக்கான சம்பள தொகை விடுவிக்கும் விவகாரம் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படும் என நேபாள பிரதமருக்கு, கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் இந்திய பிரதமர் அளித்த உறுதிமொழி நினைவுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மத்தியில், இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஆனது மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு, பிரதமர் உத்தரவின்பேரில் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பிரமருக்கான கடிதத்தில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் வழக்கம்போல் மருத்துவ பணிகளை கவனித்து கொண்டு, கொரோனா பணிகளையும் கூடுதலாக 65 வெளிநாட்டு மருத்துவர்கள் கவனித்து வந்தனர்.
அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு சம்பள தொகை எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, சுகாதார மந்திரி அல்லது எய்ம்ஸ் இயக்குனர் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான சம்பள தொகையை உடனடியாக விடுவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story