கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசத் மற்றும் எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் வர உள்ளது. அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும்போது அவர்களின் பெற்றொரும் மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தான் அதற்கு முன்னதாக அந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதை அறிவியல் ரீதியில் எதிர்கொள்ள திட்டமிடப்பட வேண்டும்.
கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் சேமிப்பு மையங்களில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உடனடியாக ஏற்படுத்தவேண்டும்.
நடவடிக்கைகளை இன்றே தொடங்கினால் கொரோனாவின் 3-வது அலையை நாம் சமாளிக்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மருத்துவ மேல்படிப்பிற்காக காத்திருக்கும் டாக்டர்களையும் நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும்.
இன்று நம்மிடம் 1.5 லட்சம் டாக்டர்கள் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நீட் (முதுகலை) தேர்வுக்காக காத்து இருக்கின்றனர். அவர்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகிறீர்கள். 1.5 லட்சம் டாக்டர்களும், 2.5 செவிலியர்களும் வீட்டில் இருக்கின்றனர். கொரோனாவில் 3-வது அலையை கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாகும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story