வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவி குறித்து வெளிப்படை தன்மை தேவை; ராகுல் காந்தி வலியுறுத்தல்


வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவி குறித்து வெளிப்படை தன்மை தேவை; ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2021 5:54 AM IST (Updated: 7 May 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பார்த்து, உலக நாடுகள் வழங்கும் உதவிகள் குறித்து வெளிப்படை தன்மை அவசியம் என்று ராகுல் காந்தி, வலியுறுத்தினார்.

வெளிப்படை தன்மை

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?. எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன?. இதில் வெளிப்படை தன்மை தேவை. இதற்கு மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா?.கொரோனா வைரசை கையாள்வதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், மக்களுக்கு வேலை வழங்குவதிலும் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் வந்ததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் சுகாதார முறை சீர்குலைந்த செய்தியை பதிவிட்டார். அதில்், “மத்திய மந்திரிகள் ஹர்ஷவர்தன், ஜெய்சங்கர் இருவரும் இந்த வீடியோவை பார்த்தீர்களா?. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் யாரும் இறக்கவில்லை என்று இருவரும் மறுக்கிறீர்களா?. இந்த வீடியோவைப் பார்த்த பின்னரும் இரு மந்திரிகளின் இதயங்கள் வருந்தவில்லையா. உங்கள் இதயங்கள் எதனால் உருவாக்கப்பட்டவை என்பதை அறிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


Next Story