தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை; மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்


தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை; மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2021 11:47 PM GMT (Updated: 7 May 2021 11:47 PM GMT)

கொரோனா தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

தடுப்பூசி பணிகள்

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த ஆட்கொல்லியிடம் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.இந்த தொற்றுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக தடுப்பூசியை மத்திய அரசு கருதுகிறது. எனவே எவ்வளவு விரைவாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தி வருகிறது.

குறித்த காலத்துக்குள்...

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதில் புதிய அறிவுறுத்தல் ஒன்றை மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வழங்கி இருக்கிறது. அதன்படி தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக (டோஸ்) காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையை குறித்த காலத்துக்குள் முடிக்குமாறும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

பாதிப்பு விகிதம் அதிகம்

இதைப்போல நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்தவகையில் 12 மாநிலங்களில் 1 லட்சத்துக்கு அதிகமான நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதாகவும், 7 மாநிலங்களில் 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

தொற்று பாதிப்பு விகிதத்தை பொறுத்தவரை தற்போதைய நிலையில் 24 மாநிலங்களில் 15 சதவீதத்துக்கு மேலும், 9 மாநிலங்களில் 5 முதல் 15 சதவீதம் வரையும் பாதிப்பு இருப்பதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கிறது

மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உச்சத்தை எட்டவோ அல்லது சரிவை தொடங்கவோ செய்திருப்பதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், ஆனால் கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

 


Next Story